| ச வெங்கடேஸ்வரன் |
ஆருத்ரா தரிசனம் என்பது சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தை நினைவூட்டும் புனித நாளாகக் கருதப்படுகிறது. புராணங்களின்படி, சிதம்பரத்தில் நடராஜ பெருமான் தனது தாண்டவத்தை ஆடிய நாள் ஆருத்ரா நாளாகும். இந்த நாளில் சிவன் – சக்தி ஒன்றிணைந்த அர்த்தநாரீஸ்வரர் தத்துவமும் சிறப்பாக நினைவுகூரப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான ஆருத்ரா திருவிழா நங்கநல்லூர் 4வது மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தில் ஜனவரி 3ஆம் தேதி அதிகாலை சிறப்பாக நடைபெற்றது. ஆருத்ராவை முன்னிட்டு அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் நடைபெற்றன. சிவபெருமான் நடராஜர் கோலத்தில் அழகாக அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, காலை நடராஜர் உற்சவர் குதிரை அலங்காரத்துடன் அமைக்கப்பட்ட தேரில் வைத்து கோலாகலமாக திருவீதி உலா நடைபெற்றது. ஆலயத்தைச் சுற்றியுள்ள தெருக்களில் பக்தர்கள் திரளாகக் கூடினர். அர்ச்சனை செய்து ஸ்வாமியை வரவேற்றனர். எங்கும் பக்தி முழக்கங்களும், சிவ நாம சங்கீர்த்தனங்களும் ஒலித்தன.
ஆருத்ரா தரிசனத்தின் மூலம் ஆன்மீக அமைதி, நல்வாழ்வு, சக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் பலரும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இவ்வாறு, இந்த ஆண்டுக்கான ஆருத்ரா திருவிழா நங்கநல்லூர் ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் மற்றும் தர்மலிங்கேஸ்வரர் ஆலயம் மற்றும் இதர கோவில்களிலும் சிறப்பான முறையில் நடைபெற்றது.


