Neighborhood Speaks

| ச வெங்கடேஸ்வரன் |

நங்கநல்லூரில் உள்ள ஸ்ரீ உத்தர குருவாயூரப்பன் திருக்கோவிலின் ஆண்டு பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் பெருமாள் திருவீதியுலா எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

ஜூலை 5-ஆம் தேதி கருட வாகனத்திலும், ஜூலை 6-ஆம் தேதி ஹனுமந்த வாகனத்திலும், ஜூலை 7-ஆம் தேதி யானை வாகனத்திலும், ஜூலை 8-ஆம் தேதி ஹம்ஸ வாகனத்திலும் பெருமாள் திருவீதியுலா எழுந்தருளினார்.

ஜூலை 9-ஆம் தேதி காலை நடைபெற்ற வெண்ணைத்தாழி உற்சவம் பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது. வெண்ணெய் குடங்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய கோலத்தில் பெருமாள் எழுந்தருளியதை காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர். மாலை குதிரை வாகனத்தில் பெருமாள் திருவீதியுலா நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் உற்சவம் ஜூலை 10-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மிகுந்த விமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு, ‘நாராயணா”கோவிந்தா’ என்ற பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சியின் 12-வது மண்டலத் தலைவர் திரு. என். சந்திரன் கலந்து கொண்டு தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகள் முழுவதும் பக்தர்கள் நிரம்பிய நிலையில் தேரோட்டம் பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.

ஜூலை 11 அன்று புஷ்ப பல்லக்கு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பெருமாள் திருவீதியுலா எழுந்தருள, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதனுடன் பிரம்மோற்சவத்தின் முக்கிய வாகன உற்சவங்கள் நிறைவடைந்தன.

இன்று (ஜூலை 12) மாலை பல்லக்கு உற்சவம் நடைபெற உள்ளது. மேலும், இன்று முதல் ஜூலை 14-ஆம் தேதி வரை விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது. ஜூலை 14-ஆம் தேதி நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் இந்த ஆண்டு பிரம்மோற்சவம் நிறைவடைய உள்ளது.

WhatsApp Image 2026-01-17 at 1.37.56 PM